நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, February 4, 2012

இணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு!






செழிப்பான நீர்வளம் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக இருப்பது மீன் வளர்ப்பு. வழக்கமாக பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையும், அதிகளவிலான அடர்தீவனங்களையும் பயன்படுத்திதான் மீன்களை வளர்க்கிறார்கள். அவர்களுக்கிடையில் கொஞ்சம் வித்தியாசமாக அடர்தீவனத்தைக் குறைத்து, அதிகளவில் பசுந்தீவனங்களை மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமாக மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் ஆபிஸீல வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து்கிட்டே இடையில் கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பயி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிவிட்டேன். மூணு ஏக்கர்ல், 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஓதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். மீதி இடத்துல் வழக்கம்போல நெல்சாகுபடி நடக்கிறது.

நானும் ரசாயன விவசாயந்தான செய்துக்கிட்டிருந்தேன். ரசாயன உரத்தால வர்ற தீமைகளை அடிக்கடி கெள்விப்படுறப்போ எனக்குள்ள ஒரு உறுத்தல் வந்தது. அதனால, இயற்கைக்கு மாறனும்னு பயிற்சிகளில் கலந்துக்கிட்டேன். விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல பசுமை விகடனும் அறிமுகமாகவே, முழுசா இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிட்டேன். மீன் வளர்ப்புத் துறையில இருக்கற பெரும்பாலான விஞ்ஞானிகள், உரம் போட்டுத்தான் மீன் வளர்க்கச் சொல்றாங்க, விவசாயத்துலயே ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கணும்னு பேசிக்கிட்டிருக்கறப்போ, ‘மீன் வளர்க்கறதுக்குப் போய் ரசாயனத்தைப் பயன்படுத்தணுமா?னு ஒரு கேள்வி எனக்குள்ள உருவாகியது. குளத்துக்கு அடியில் இருக்குற மீனுக்கானத் தீவனத் தாவரங்கள் வேகமா வளர்றதுக்குத்தான் ரசாயன உரம் பயன்படுத்தறாங்க. ஆனா, அதோட தாக்கம் தண்ணீர் மூலமாக கட்டாயம் கொஞ்ச அளவுக்காவது மீன் உடம்புக்குள்ளேயும் இருக்கத்தான் செய்யும். அதனால உற்பத்திச் செலவு அதிகரிக்கிறதோட மீனோட சுவையும் குறைந்துவிடும். எனக்கு இதில் ஒப்புதல் இல்லாததால  இலை, தழைகளைக் கொடுத்தே மீன் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இயற்கையாவே ஆறு, குளத்துலயெல்லாம் வளர்ற மீன்களுக்கு யாரும் உரம் போடுறதில்லையே.

வீட்டு ஓரங்கள்ல தோட்டக்கால் வேலிகளில் முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்கள வளர்த்து, அதையே வளர்ப்பு மீன்களுக்கு உணவா கொடுக்கலாமேனு யோசித்து அதையே நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். குளத்துக்குள்ள நுண்ணுயிர்கள், பாசி வளர்றதுக்கு சாணம் மாதிரியான இயற்கைக் கழிவுகளையும் கொடுக்குறேன். இப்படி வளர்த்தாலே ஆறே மாதத்தில் மீன் ஒவ்வொண்ணும் ஒரு கிலோ எடைக்கு வந்துவிடுகிறது. சுவையாவும் இருக்கு. அப்பறம் எதுக்குத் தேவையில்லாம ரசாயனத்தைப் பயன்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியவர், 33 சென்ட் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பதற்கானத் தொழில்நுட்பத் தகவல்களை, அழகாக விளக்குகிறார்.

35 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழம் இருக்குமாறு குளம் வெட்டிக் கொள்ள வேண்டும் (விவசாயத் தேவைக்கான நீராதாரத்தைப் பெருக்குவதற்காக, அரசு செலவில் பண்ணைக் குட்டை அமைத்துத் தரும் திட்டத்தை வேளாண்துறை நடை முறைப்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீன் வளர்ப்பையும் மேற் கொள்ளலாம்). அதில் தண்ணீரை நிரப்பி, குறிப்பிட்ட அளவுக்கான நீர், தொடர்ந்து தேங்கி நிற்கிறதா என்பதை உறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிகமாக தண்ணீர் உறிஞ்சக்கூடிய பகுதியாக இருந்தால், குளத்தின்  அடியில் கரம்பை மண்ணைப் பரப்பி, தண்ணீரைத் தேக்கலாம். ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் அருகில் இருக்கும் பகுதியாக இருந்தால், கவலையேபடத் தேவையில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கும்.

பண்ணைக் குட்டையில் மூன்றடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிரப்பி, இரண்டு மாட்டு வண்டி அளவுக்கு கட்டி இல்லாத ஈர சாணத்தை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரத்திலேயே சாணத்தில் இருந்து நுண்ணுயிர்கள் பெருகி விடும்.பிறகு அருகில் உள்ள மீன் விதைப் பண்ணைகளில் இருந்து, இரண்டு மாத வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடவேண்டும். மீன்கள், அவை வளர்க்கப்படும் பகுதியைப் பொறுத்து மூன்று வகைகளாக அழைக்கப்படுகின்றன. அடி மீன் (சி.சி. காமன் கார்ப், மிர்கால்), நடுத்தட்டு மீன் (ரோகு, கெண்டை), மேல் மீன் (கட்லா, சில்வர்) எனப்படும் இந்த மூன்று வகைகளையும் கலந்து வளர்க்கும் போது குளத்துக்குள் இட நெருக்கடி இல்லாமல் மீன்கள் வளரும். பொதுவாக அனைத்து வகை மீன் குஞ்சுகளும் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. வளர்ந்த மீன்களை மொத்தமாக விற்கும் போதும் சராசரியாக விலை நிர்ணயித்துதான் வியாபாரிகள் வாங்கவார்கள். அதனால் பல ரகங்களைக் கலந்து வளர்க்கும் போது விற்பனையில் பிரச்சனை இருக்காது. ஒரு வேளை நேரடி விற்பனை செய்வதாக இருந்தால், நமது பகுதி சந்தை நிலவரத்துக்கேற்ற அளவுக்கு ஒவ்வொரு ரக மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 33 சென்ட் அளவு குளத்துக்கு 1,200 குஞ்சுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளை விட்ட பிறகு நீர்மட்டத்தை நான்கடிக்கு உயர்த்தி, எப்போதும் அதே தண்ணீர் மட்டம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

குஞ்சுகளை விட்டதில் இருந்து இரண்டு நாளைக்கு ஒருமுறை தொடர்ந்து 25 கிலோ அளவுக்கு பசுஞ்சாணத்தைக் குளத்தில் கலந்து விடவேண்டும். ஒரு மாத காலம் வரை தினமும் 5 கிலோ அரிசித் தவிடு, ஒரு கிலோ தேங்காய் பிண்ணாக்கு, ஒரு கிலோ அரிசியில் வடித்த சாதம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மூன்று பங்காகப் பிரித்து சிறிய ஓட்டைகள் உள்ள சாக்கில் இட்டு, மூன்று இடங்களில் தண்ணீரின் மேல்மட்டத்தில் மூழ்குமாறு வைக்க வேண்டும். வழக்கமாக கடலைப் பிண்ணாக்கைத்தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். அதைவிட குறைவான விலையில் கிடைக்கும் தேங்காய்ப் பிண்ணாக்கிலும் அதற்கு ஈடான புரதச்சத்து இருப்பதால், தீவனச்செலவு கணிசமாகக் குறையும். தவிர, தேங்காய் வாசனைக்கு மீன்கள் போட்டிப் போட்டு வந்து சாப்பிடும். இரண்டாவது மாதத்திலிருந்து அரிசித் தவிடை மட்டும் மூன்று கிலோ கூட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த தீவனங்கள் மட்டுமில்லாமல் தினமும் 5கிலோ அளவுக்கு முருங்கை, அகத்தி, சூபாபுல், புல்வகைகள் என பசுந்தீவனங்களையும் கலந்து குளத்தில் இட வேண்டும். துளசி, சிறியாநங்கை  போன்ற மூலிகைகளையும் கலந்து இடலாம். நாம் இடும் பசுந்தீவனத்தில் எந்த வகையான இலைகளை மீன்கள் உண்ணாமல் கழிக்கிறதோ அந்த வகைகளை இடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும். அதே போல முதல் நாளே அதிகளவில் பசுந்தீவனத்தைக் கொட்டி விடாமல், கொஞ்சமாகக் கொட்டி மீன்கள் சாப்பிடும் அளவுக்கேற்ப அதிகரிக்க வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டால், அதிக எடை கூடுமே தவிர, வேறு தவறான விளைவுகள் எதுவும் வராது. தவிர, எந்த வகையான உயிரினமாக இருந்தாலும், தேவையான அளவுக்குத்தான் சாப்பிடும் என்பதால், தினமும் நாம் அளிக்கும் தீவனத்தில் மீன்கள் எவ்வளவு சாப்பிடுகின்றன, என்று தொடர்ந்து கவனித்து வந்தாலே எளிதாக மீன்களின் உணவுத் தேவையைக் கணித்து விடலாம்.

இதுபோல வளர்த்து வந்தால், மீன்களின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். ஆறு மாதத்திலேயே ஒரு மீன், ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ வரை எடை வந்து விடும். மீன்கள் ஒரளவுக்கு எடை வந்த பிறகு அறுவடை செய்து விற்பனை செய்யலாம். வளர்ப்பு விதங்களைச் சொல்லி முடித்த பிச்சை பிள்ளை, “போட்லா வகை மீன்கள் இயல்பாவே அதிக எடை வந்துடும். நாம இந்த மாதிரி வளக்குறப்போ ஆறு மாசத்துல ஒரு மீன் அதிகபட்சமா நாலு கிலோ வரைகூட எடை வருது. கட்லா ஆறு மாசத்துல இரண்டரை கிலோ வரை எடை வரும். புல்கெண்டை, மிர்கால் மாதிரியான மீன்கள் இரண்டு கிலோ வரை எடை வரும். சி.சி.சாதாக் கெண்டை மீன்கள் ஒன்றரை கிலோ வரையும், ரோகு அரைகிலோ எடை இருக்கும்.
33 சென்ட் நிலத்தில் 6 மாதங்களில் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் வரவ –செலவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
மீன்குஞ்சு
3,000

தீவனம்
6,000

சாணம்
2,000

உரங்கள்
1,000

மீன் மூலம் வரவு (700X85)

59,500
மொத்தம்
12,000
59,500
நிகர லாபம்

47.500
இரண்டு மாத வயதுள்ள குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்கிறப்போது இறப்பு விகிதம் குறைந்துவிடறதால் எண்பது சதவிகிதம் மீன்கள் வளர்ந்து வந்துவிடும். அதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த எல்லா  வகை கலந்து 1,200 குஞ்சுகள் விட்டோம்னா சராசரியாக  1,500 கிலோவுக்கு குறையாம அறுவடை பண்ண முடியும். சராசரியாக  கிலோ 70 ரூபாய்னு வியாபாரிங்க எடுத்துக்குறாங்க. ஆக, 1,05,000 ரூபாய்க்கு விற்பனை பண்ண முடியும். கரன்ட், தீவனம், பராமரிப்பெல்லாம் போக 75,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு : பிச்சை பிள்ளை
அலைபேசி : 80985 – 54747

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...