நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, February 4, 2012

வாழ்க்கையை வளமாக்கிய எருமை வளர்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம்,  கோடுகிழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம். என் மாமனார், 1987-ம் வருடம் எனக்குச் சீதனமாக கன்னுக்குட்டியோட ஒரு எருமை மாட்டைக் கொடுத்தார். அப்ப எனக்குனு இருந்தது, ஒரு ஏக்கர் நிலமும், ஒரே ஒரு மண் குடிசையும்தான். எருமையும். கன்னுக்குட்டியும் வந்த அடுத்த வருடத்துலயே என் வாழ்க்கை மாறத் தொடங்கிடுச்சு. மாடுகளோட எண்ணிக்கை பெருகிக்கிட்டே போய்விட்டது. பால் மற்றும் மாடு விற்பனை மூலமாக நல்ல வருமானம் கிடைத்தது.  இந்த வருமானத்தை வைத்து தான் குடும்பத்தைக் கவனித்து, வசதியாக வீடு கட்டி என் ரெண்டு பொண்ணுங்களையும் நன்றாக படிக்க வைத்து வசதியான இடத்தில் கல்யாணமும் பண்ணிக் கொடுத்தேன். அதுமட்டுமில்லாமல் நில புலன்களும் கொஞ்சம் வாங்கியிருகேன்”.

            “சீதனமா வந்தப்ப. எருமைக்கு நாலு வயசு, சினைப் புடித்து, அடுத்த பத்து மாதத்தி்ல கன்னு போட்டுவிட்டது. சீதனமாக வந்தபொழுது கன்றுக்குட்டிக்கு ஒண்ணரை வயது. அடுத்த ஒண்ணரை வருடத்திலேயே அதுவும் கன்று போட்டுவிட்டது. புதுசாக பிறந்த ரெண்டு கன்னுக்குட்டியும் வளர்ந்து, மூணாவது வயதில் அதுங்களும் கன்று போட்டுவிட்டது. இப்படியே பெருகி ஏழு வருடத்திலேயே பதினாறு எருமைகள் ஆகிவிட்டது.
            இரண்டு வயது முடித்ததும், பருவத்துக்கு வந்து சினைப்புடித்து, அடுத்த பத்து மாத்தில் கன்று போட்டுவிட்டுவிடுமா அடுத்த ஐந்து மாதத்திலேயே மறுபடியும் சினைப் புடித்துவிடும், சராசரியாக பதினைந்து மாதத்துக்கு ஒரு முறை ஒரு ஈத்து கிடைக்கும். ஒரு எருமையிலிருந்து இதே மாதிரி பத்து ஈத்து வரைக்கும் கிடைக்கும். ஆனா, நாங்க இரண்டு ஈத்து வரைக்கும் தான் ஒரு எருமையை வைத்திருப்போம். மூன்றாவது ஈத்து போட்டதும், கன்னுக்குட்டியோட அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் விலை வைத்து வித்துவிடுவோம்.
கன்னுக்கு நன்றாக பால் கொடுத்து வளர்க்கறதால். சீக்கிரத்துலேயே சினைப் புடித்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தியும் இருக்கும். தொடர்ச்சியாக பாலும் கிடைக்கும். அதனால், எங்க வளர்ப்பில் இருக்கற எருமைகளுக்கு சந்தையில் எப்பவும் நல்ல மதிப்பு இருக்கு.

            ஒரு கடா கன்னுக்குட்டி, இரண்டு வருடத்தில் சினையூட்டறதுக்குத் தயாராயிடும். எங்ககிட்ட உள்ள கடாவும் நல்ல ஆரோக்கியமா, திடகாத்திராமா இருக்கிறது. சினை ஊசி போடாமல் இயற்கையாகவே கருவூட்டல் நடக்கிறதால், சீக்கிரத்தில் கிடேரி சினைப் புடித்துவிடும். பிறக்குறக் கன்னுக்குட்டியும் நல்லா  ஆரோக்கியமா இருக்கும். பத்து கிடேரிக்கு ஒரு கடா வளர்த்தாலே போதும். நாலு வயது வரைக்கும் கடா நல்ல வீரியமாக இருக்கும். அதுக்கு மேல அதை வித்துடலாம். நாலு வயதுள்ள கடாவுக்கு பத்தாயிரம் ரூபாய் விலை கிடைக்கும். இதுவரைக்கும் 30 கடா விற்று இருக்கிறோம். இப்ப என்கிட்ட சுருட்டை இனத்தைச் சேர்ந்த மூன்று பெரிய எருமையும், மூன்று கிடேரியும், ஒரு கிடேரி கன்றும், ஒரு கடாவும் இருக்கிறது.

வளர்க்கும் முறை:
எருமைகளைக் கட்டிப்போட்டுத்த தீவனம் கொடுத்து வளர்ப்பவர்களுக்கு நஷ்டம்தான் மிஞ்சும். எருமை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் கன்றுக்கு தேவையான அளவுக்கு பாலை விடாமல், முழுமையாகக் கறந்துவிடுவார்கள். இதனால் கன்றுகள் வளரும்போது நோய் எதிர்ப்புச் சக்தியே இல்லாமல். நோஞ்சானாகி விடும். சினைப் பிடிப்பதிலும் பிரச்சனை உருவாகும். சினைப் பிடித்தாலும்கூட, பிறக்கும் கன்று ஆரோக்கியம் இல்லாமல் திடீரென இறந்து விடும். எருமையின் பால் கொடுக்கும் திறனும் வெகுவாகக் குறைந்து விடும். அதனால் எருமை வளர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கன்று பிறந்ததிலிருந்து பத்து மாதம் வரை தாய்ப்பால் தர வேண்டும். பிறந்த 15-ம் நாள் வரை காலை, மாலை இருவேளையும் முழுமையாக பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். 15 நாட்களுக்குப் பிறகு, எருமையின் பால் சுரக்கம் தன்மை அதிகரிக்கத் தொடங்கும். அப்போது, ஒரு காம்பில் மட்டும் பாலை கறந்து கொண்டு, மற்ற மூன்று காம்புகளையும் கன்றுக்காக விட்டுவிட வேண்டும்.

            எருமைப் பாலில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால், கன்றுக்கு செரிமானம் ஆகாமல் பல தொந்தரவுகள் உருவாகும். அதனால் கன்றுக்குட்டி பிறந்ததிலிருந்து ஒரு மாதம் வரை தினமும் ஒரு பூவன் வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பாலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டும். 30 நாட்களுக்கு மேல் புல், வைக்கோல் என தீவனம் தின்னத் தொடங்கும். அப்போது 2 காம்பில் மட்டும் பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். 45 நாட்களுக்கு மேல் ஒரு காம்பில் மட்டுமே அனுமதிக்க வேண்டும். 60 நாட்களில் இருந்து, எட்டு மாதம் வரை அரை காம்பில் மட்டுமே பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். அதாவது, குறிப்பிட்ட அளவுக்கு மேல் குடிக்க அனுமதிக்கக் கூடாது. ஒரு  கன்றுக்குட்டி, பத்து மாத வயது வரை தாய்ப்பால் அருந்த வேண்டும். அதன் பிறகு அனுமதிக்கக் கூடாது. நாமும் பால் கறக்கக்கூடாது ஏனென்றால், அந்தச் சமயத்தில் தாய் மாடு 6 மாத சினையாக இருக்கும். ஆனால். பெரும்பாலும் கன்று போடும் முதல் நாள் வரை பால் கறந்து  விடுகிறார்கள். அப்படிச் செய்தால், எருமையில் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, அதன் வயிற்றில் உள்ள கன்றின் உடல்நலமும் பாதிக்கப்படும்.

எருமை வளர்ப்பபை பொறுத்தவரை மேய்த்தலும் தேய்த்தலும்தான் மிக முக்கியம் பிறந்த ஒரு மாதத்திலிருந்தே கன்னுக்குட்டியை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். புல் மற்றும் மூலிகைத் தாவரங்களை உண்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும். எருமையைப் பொறுத்தவரை செரிமானப் பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. வீட்டிலேயே தீவனம் போட்டு வளர்த்தால், செரிமானம் ஆகாமல், குடல் புழுக்கள் அதிகமாகி, பலவிதமான நோய்கள் உருவாகும். சில சமயம் இறந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.

தினமும் ஐந்து மணி நேரமாவது மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக சினை மாடுகளை, கன்று ஈனுவதற்கு முதல் நாள் வரை மேய்ச்சலுக்கு அழைத்து  சென்றால்தான், எவ்வித சிரமமும் இல்லாமல் ஈனும். பிறந்ததிலிருந்து 30 நாட்களுக்கு மேல் கன்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லலாம். பங்குனி முதல் ஆடி வரை வெயில் அதிகமாக இருப்பதால், தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மேய்த்து விட்டு, அதன் பிறகு 12 மணி வரை நீர்நிலைியல் கிடக்கச் செய்து. நன்கு தேய்த்து குளிப்பாட்டி கொட்டகைக்கு அழைத்து செல்ல வேண்டும்.. இல்லைபென்றால், பேன், உன்னி உருவாகி பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மாட்டுக் கொட்டகைக்கு அழைத்து வந்ததும். மதியம் 2 மணிக்கு ஒரு முறையும், 3 மணிக்கு ஒரு முறையும் எருமையின் மேல் தண்ணீர் தெளித்து, உடல் சூடேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாலை 4 மணிக்குத் திரும்ப வேண்டும். மற்ற காலங்களில் காலை 10 மணியில் இருந்து 2 மணி வரைக்கும் மேய்ச்சலில் இருக்க வேண்டும்.
தினமும் குளிப்பாட்டும்போது கால் விரல்களின் இடுக்குகளில் அழுக்கு சேராமல் நன்றாக தேய்க்க வேண்டும். இல்லையென்றால் புண்கள் உருவாகி, புழுக்கள் பெருக்கெடுத்து. உயிருக்கே ஆபத்தாகி விடும்.

எருமை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும். மழையைத் தாங்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. மழையில் அதிகமாக நனைந்தால்... காய்ச்சல் உருவாகி ஜன்னி கண்டுவிடும். மழைக்காலங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தால் மட்டும், அதிகபட்சம் நான்கு மணி நேரம் மழையில் இருக்கலாம். எருமை தினமும் சாணம் போடவேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு நாள் தவறினாலும்... அது வியாதிக்கான அறிகுறி. உடனடியாக மருத்துவரிடம் காட்ட வேண்டும். சாணம் கழிசலாக இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். சாணம் துர்நாற்றம் அடித்தால் அது குடற்புழு இருப்பதற்கான அறிகுறி. உடனே குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். சாதாரணமாகவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து தர வேண்டும். இதையெல்லாம்விட எப்போதுமே மாட்டுக் கொட்டகையை சுத்தமாக வைத்திருந்தாலே நோய்கள் அதிகம் தாக்காது.

“பொறுமைக்கு உதாரணமா எருமையைச் சொல்லுவாங்க. அந்தப் பொறுமையை எருமை வளர்க்கறதுலயும் காட்டணும். அப்பத்தான் நாம் நினைத்த மாதிரி லாபத்தைப்ப பார்க்க முடியும்”.

தொடர்புக்கு
ராமலிங்கம்
கோடுகிழி கிராம்,
தஞ்சாவூர் மாவட்டம், 
அலைபேசி: 93445-36882
தஞ்சாவூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...