நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, February 4, 2012

நம்பிக்கை தரும் நாமக்கல் காடை



மேலே

லட்சக் களக்கில் செலவழித்து கோழிப் பண்ணை அமைப்பது என்பது எல்லா விவசாயிகளுக்கும் சரிப்பட்டு வருவதில்லை. அவர்களுக்கு ஏற்ற தொழில் காடை வளர்ப்பு தான். இதற்கு இட வசதி தேவையில்லை. ஒரு கோழி வளர்க்கிற இடத்தில் ஐந்து காடையை வளர்க்கலாம். அதே போல் முதலீடும் அதிகமாக தேவைப்படாது. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்திருக்கின்ற சின்ன விவசாயிகளுக்கு மிகவும் கைகொடுக்கக்கூடியது. “காடை வளர்ப்பு” என்கிறார் நாமக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனுபவ விவசாயி முத்துசாமி.

30 நாட்களில் வருமானம்!

“ஏற்கெனவே, நாட்டுக் கோழி பண்ணை வைத்திருந்தேன். கோழியில் நோய், நொடி வந்து அடிக்கடி இறந்து போகும். அதனால் பராமரிப்புலையே பாதி நேரம் போயிவிடும். அப்பொழுது தான் நாமக்கல், கால்நடைக் கல்லூரியில் காடை வளர்ப்பைப் பற்றி பயிற்சி கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இடமே குஞ்சுகளை வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் இருந்த ஒரு கொட்டகையில் விட்டு வளர்த்தேன் குறைந்த நாட்களில் அதிக எடை வருகிற ‘நாமக்கல் – 1’ ரக காடையைத்தான் நான் வளர்க்கிறேன். கோழி மாதிரி, இதனை நோய், நொடி தாக்குவதில்லை. அதனால் உசி, மருந்து போடுகிற வேலையும் இல்லை. தினமும் காலையில் ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீர் வைத்து பார்த்தால் போதும். அந்த வேலையை வீட்டில் இருக்கிறவர்களே செய்யலாம். கோழி வளர்த்தால் வருமானம் பார்க்க 90 நாட்களாகும். ஆனால் இந்தக் காடையில் 30 நாட்களில் வருமானம் பார்க்கலாம். இதைப் பார்த்த பிறகு கோழிப் பண்ணையை விட்டுவிட்டு நாலு கொட்டகையிலையும் காடையை வளர்க்க ஆரம்பித்துவிட்டேன்.

மாதம் 10 ஆயிரம்!

என்னிடம் மொத்தம் 2,000 குஞ்சுகள் இருக்கிறது. அதில் பொடிக் குஞ்சு, 10 நாள் குஞ்சு, 20 நாள் குஞ்சு, 30 நாள் குஞ்சு என்று நான்காக பிரித்து வளர்க்கிறேன். இதை சுழற்சி முறையில் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் வயதுள்ள குஞ்சுகள் நாமக்கல் கல்லூரியில் வாங்கி வந்து முப்பது நாளைக்கு வளர்த்து விக்கின்றேன். ஒரு காடைக்கான உற்பத்தி செலவு 15 ரூபாய் வரைக்கும் ஆகும். அதை 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரைக்கும் விற்கின்றேன். விற்பனையில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அருகில் இருப்பவர்கள், கறிக்கடைக்காரர்கள், நைட்ஹோட்டல்காரர்கள் தேடி வந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள். மாதம் ஆயிரம் குஞ்சுகளை வித்தாலும் செலவு போக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

குறைந்த நாளில் அதிக எடை!

‘நாமக்கல் காடை – 1’ ரகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற காடை ரகங்களை விட இந்த ரக காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். மற்ற காடைகளைவிட, இந்த ரகத்தை வாங்கி வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும்.

பழைய பண்ணைகளே போதும்!

“காடைகளை வளர்க்க அதிக பணம் தேவையில்லை. பயன்படுத்தாத கொட்டகை, கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கலாம். அல்லது குறைந்த முதலீட்டில் கொட்டகை போட்டும் வளர்க்கலாம். ஆழ்கூளம் (கொட்டகை), கூண்டு என இரண்டு முறையிலும் வளர்க்கலாம். நமது வசதியைப் பொறுத்து இதை முடிவு செய்து கொள்ளலாம். கொட்டகையைவிட கூண்டில் வளர்க்கும் போது கையாள்வதற்கு சுலபமாக இருப்பதுடன் நோய்க் கிருமிகளும் அதிகமாக தாக்காது. ஆனால், கூண்டு செய்ய ஆரம்ப முதலீடு சிறிது அதிகமாக இருக்கும்.
முதல் முறையாக காடையை வளர்ப்பவர்கள், சுமார் 12 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுடைய காடைக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். முதல் பத்து நாட்களுக்கு விளக்குப் போட்டு, போதுமான சூட்டை (வெப்பம்) குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும். இந்தப் பத்து நாட்களும் பருவ நிலைக்கு ஏற்ப செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும்.

இறப்பைத் தடுக்கும் கோலிக்குண்டு!

முதல் இரண்டு வாரத்தில் பெரும் பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் விழுந்து அதிகமாக இறந்து விடும். அந்தப் பாத்திரத்தில் கோலிக்குண்டுகளை போட்டு வைத்தால் உள்ளே என்னவோ இருக்கிறது என்ற பயத்தில் குஞ்சுகள் உள்ளே இறங்காமல் இருக்கும். இதன் மூலம் அவற்றின் இறப்பைத் தவிர்க்கலாம். அல்லது ‘நிப்பிள்’ மூலம் தண்ணீர் கொடுக்கலாம். நிப்பிளைப் பயன்படுத்தும் போது சுத்தமான நீர் தொடர்ச்சியாக குஞ்சுகளுக்கு கிடைக்கும்.
காடைக் குஞ்சுகளின் கால் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் வளவளப்பான பரப்பில் (செய்தித் தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும் தீவனம், தண்ணீர் எடுக்காமல் இறந்து போகும். எனவே, சணல் துணியைப் பரப்பி அதன் மேல் மூன்று நாள் வளர்ந்த பிறகு, வளவளப்பான பரப்பில் வளர்த்தால் கால் ஊனமாகாது.
இரண்டாவது வாரத்தில் காடையின் எடை, சராசரியாக 90 கிராம் இருக்க வேண்டும். இந்தப் பருவத்தில் தான் வளர்ச்சி வேகமாக இருக்கும் அதனால் தொடர்ச்சியாக தீவனம் கிடைப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் தீவனம் எடுக்க வசதியாக இடத்தை வெளிச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

500 கிராம் தீவனம்.. 200 கிராம் எடை!

காடைகளுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு ஆரம்பகால தீவனத்தையும் கொடுக்க வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது. ஆரம்ப கால தீவனத்தில் புரதம் அதிகமாகவும், எரிசக்தி குறைவாகவும் இருக்கும். இறுதி கால தீவுனத்தில் புரதம் குறைவாகவும், எரிசக்தி அதிகமாகவும் இருக்கும். காடைக்கான பிரத்யெகத் தீவனம் கிடைக்காவிட்டால் பிராய்லர் கோழிக்கான, ‘ஆரம்ப காலத் தீவனத்தையே பயன்படுத்தலாம். ஒரு காடை 500 கிராம் தீவனத்தை சாப்பிட்டால், 200 கிராம் எடை வரும். காடை வளர்ப்பில் தீவனச் செலவு 70% இருக்கும். சொந்தமாக தீவனம் தயாரிக்கும்போது இதைக் குறைக்கலாம். ஆனால் வாரத்திற்கு 1,000 காடைகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே தீவனத் தயாரிப்பில் இறங்க வேண்டும். சிறிய அளவில் வளர்க்கும்போது, தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கும் செலவு அதிகமாகிவிடும்.
காடைக்கு தீவனம் மாதிரியே தண்ணீரும் மிகவும் முக்கியம். இரண்டும் சுத்தமாக இருந்தால், பெரும்பாலும் நோய்கள் வராது. முதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் கொடுப்பது நல்லது. பிறகு, கொதிக்க வைக்கத் தேவையில்லை. தண்ணீரில் ‘ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ கிருமிநாசினியைக் கலந்து கொடுத்தால் போதும். இது, குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து கொடுக்கலாம்.

கறிக்கோழி வளர்ப்பவர்கள் அதை விற்பனை செய்வதற்குள் 4 தடுப்பூசி போடுவார்கள். ஆனால், காடைகளுக்கு எந்த விதமான தடுப்பூசிகளும் போடத் தேவையில்லை. தண்ணீர், தீவனம் சுகாதாரமாக இல்லாவிட்டால், மட்டுமே நோய் தாக்கும். தரையில் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது, கோழிகளைத் தாக்கும் ரத்தக் கழிசல் நோய் வர வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க தீவனத்தில் ரத்தக் கழிசல் நோய்த் தடுப்பு மருந்துகளைக் கலந்து கொடுக்கலாம். காடைகளைக் கூண்டு முறையில் வளர்க்கும் போது பெரும்பாலும் ரத்தக் கழிசல் நோய் வருவதில்லை.

விற்பனையில் வில்லங்கமில்லை

அதிகபட்சம் 15 ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு காடை 25 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள், அசைவ உணவகங்கள், அருகில் உள்ளவர்கள், பார்களில் இதற்கான விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்களிடம் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பவர்களுக்கு இதுவரை விற்பனையில் பிரச்சனை என்று வந்ததில்லை. எனவே நிச்சய லாபம் கிடைக்கும் இந்த ‘நாமக்கல் – 1’ ரக காடையை விவசாயிகளுக்கு முன்பதிவின் அடிப்படையில் ரூ. 3.50 வீதம் விற்பனை செய்கிறோம்.

தொடர்புக்கு:
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கோழியின அறிவியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
நாமக்கல் – 637002
தொலைபேசி: 04286 – 266494
முத்துசாமி,
அய்யம் பாளையம் கிராமம்,
நாமக்கல் மாவட்டம்
தொலைபேசி: 99659 - 52483

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...