நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, February 4, 2012

தினமும் 18 லிட்டர் பால்! சந்தோஷம் பொங்க வைக்கும் சிந்து சமவெளி மாடு .. !


காட்டு வாழ்க்கையிலிருந்து, நாகரிகப் பாதையில் நடைபோடத் தொடங்கிய மனிதன், பாலுக்காக மட்டுமில்லாமல்.. உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் ஒன்றுதான் மாடு!
கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரை பல்வேறு  பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இங்கே இருக்கின்றன. ஆனால், காலப்போக்கில் ... ‘அதிக பால’ என்கிற கோஷம் இந்தியாவில் உரத்து ஒலித்ததோடு, மாடுகளின் பிற தேவைகளும் குறைய ஆரம்பித்து விட்டது. இதனால், நம் நாட்டு ரக மாடுகள் எல்லாம் ‘அடிமாடு’ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு, வெளிநாட்டுக் கலப்பின மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம், ‘நம் நாட்டு மாடுகளிலும் அதிக பால் கொடுக்கும் மாடுகள் இருக்கின்றன’ என்கிற உண்மையை உணர்த்த தமிழக விவசாயிகளில் சிலர், வடமாநிலங்களிலிருந்து அத்தகைய மாடுகளை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம், கோனூர் கிராமத்தைச் சேர்ந்த திம்மையா, அவர்களில் ஒருவர். நாட்டு மாடுகளைப் பற்றி கேட்டால், மடை திறந்த வெள்ளமாக வந்து விழுகின்றன அவரிடமிருந்து வார்த்தைகள்..

ஒரு டோஸ் விந்து 1,500 ரூபாய்!
“விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்குற குடும்பம் எங்களோடது. அப்பா திடீர்னு இறந்ததும் விவசாயத்தை நான் கையில் எடுக்க வேண்டியதாயிடுச்சு. விவசாயத்துக்காக அப்பா கடன் வாங்கியருந்தார். கொஞ்ச நிலத்தை வித்து, அதையெல்லாம் அடைத்தேன். ‘வருடம் முழுக்க ஓய்வில்லாமல்  உழைத்தாலும், விவசாயத்தில் கடன் மட்டுமே மிச்சமாகிறது ஏன்.. என்ன காரணம்?’னு அடிக்கடி யோசிச்சிக்கிட்டே இருப்பேன். அப்பத்தான் இயற்கை விவசாயத்தைப் பற்றி  தெரிய வந்தது. இப்ப, 10 வருடமா இயற்கை விவசாயம்தான். சுபாஷ் பாலேக்கரோட ‘ஜீரோ பட்ஜெட் பயிற்சி’யில கலந்துகிட்ட பிறகு, நாட்டு மாடுங்க மேல் தனி மரியாதை வந்துடுச்சு. உடனே, உம்பளாச்சேரி ரக மாடுங்க இரண்டை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். பயிருங்களுக்கத் தேவையான ஜீவாமிர்தத்துக்கு சாணம், மாட்டுச் சிறுநீர் இதுக்கெல்லாம் பிரச்சனை இல்லாம போயிடுச்சு.

இதெல்லாம் சரி.. கலப்பின மாடுங்க மாதிரி அதிகமா பால் கிடைக்க மாட்டேங்குதேனு ஒரு யோசனையோட, நாட்டு மாடுகள் பத்தின தகவல்களைத் திரட்டத் தொடங்கினேன். வெளிநாட்டு மாடுகளுக்கு சமமா பால் கொடுக்கிற நாட்டு ரக மாடுகள் வட இந்தியாவில் இருக்கிறது தெரிந்து, அதை வாங்குகிற முயற்சியில் இறங்கினேன். இதற்க்கு நடுவில், ‘கிர்’ மாட்டோட விந்தை, உம்பளச்சேரி  பசுவுக்கு செயற்கை கருவூட்டல் செய்யலாமே’னு ஒரு யோசனை தோணுச்சு. அதுக்காக சேலத்தில் இருக்கிற ஒருத்தர்கிட்ட கேட்டேன். ஒரு டோஸ்.. 1,500 ரூபாய்னு சொன்னார். நாட்டு மாட்டு விந்துவுக்கு உள்ள கிராக்கியைப் பார்த்த பிறகு, செயற்கை முறை கருவூட்டறது தொடர்பான  பயிற்சி எடுத்துக்கிட்டு, அந்த வேலையையும் செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு மாடு .. 60 ஆயிரம் ரூபாய்!
மாடு வாங்கறதுக்காக குஜராத், பஞ்சாப், ஹரியானா பகுதிகளுக்கு நேரில் சென்றேன். அதில் என்னை அதிகமாக கவர்ந்தது.. சாஹிவால் ரக மாடுங்கதான். சாதாரணமா மேய்ச்சலுக்கு போயிட்:டு வந்து, 15 லிட்டர் தொடங்கி, அதிகபட்சம் 20 லிட்டர் வரை பால் கறக்குறது நேரில் பார்த்ததும், ஆச்சரியமா போயிடுச்சு. மேய்ச்சலைத் தவிர வேறெந்த தீவனத்தையும் கொடுக்காமலே இவ்வளவு பால் கறக்குதே.. இதை வாங்கிட்டு போயே தீரணும்னு முடிவெடுத்தேன்.
எங்ககூட வந்திருந்தவங்களோட சேர்ந்து 10 மாடுகளை  வாங்கினேன். ஆனா, அதுங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கிறது சாமானியப்பட்ட வேலையா இல்லை. நம்ம  ஊரில் லாரிகளில் மாடுகளை ஏத்திக்கிட்டு போனா.. யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாங்க. வட மாநிலங்களில் அங்கங்க கராம மக்களே வண்டியை மறிச்சுடறாங்க. ‘அடிமாட்டுக்கு கொண்டு போகலை. வளர்க்கறதுக்குத்தான் கொண்டு போறோம்’னு ஆதாரத்தோட புரிய வைத்துவிட்டு வர்றதுக்குள்ள தாவு தீர்ந்து விடும். அது போக அனுமதி, போக்குவரத்துனு செலவும் அதிகமா பிடிக்கும். அதாவத, ஒரு மாட்டோட விலை தமிழ்நாட்டுக்கு வரும் போது 60 ஆயிரம் ரூபாய் ஆயிடுச்சு.

குறைந்த பராமரிப்பு!
பெரும்பாலும் பாலுக்காக மட்டும்தான் இப்பெல்லாம் மாடுகள் வளர்க்கறாங்க. அதனால் தான், வெளிநாட்டு மாடுகளை வளர்க்கிறதில் விவசாயிகள்  அதிக ஆர்வம் காட்டுறாங்க. ஆனால், அந்த மாடுகளுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை,சாஹிவால் மாதிரியான நம்ம நாட்டு மாடுகள்.  கிடைத்ததைத் தின்னுட்டு, நாளொன்றுக்கு அதிகபட்சம்  20 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்கிறது சாஹிவால் ரக மாடுகள். வெளிநாட்டு மாடுகளை வெயில், மழைக்கு பாதுகாத்து வளர்த்தாலும், பால் மூலமா வர்ற வருமானத்தில் சரிபாதி தீவனத்துக்கே செலவாகிறது. ஆனால், இந்த மாடுகளை  வளர்த்தால்.. தீவனச் செலவை பற்றி அதிகமாக அலடிக்க தேவையில்லை. குறைந்த செலவு, குறைந்த பராமரிப்புலேயே அதிக பால் கொடுக்கும்.

வருடத்தில் 6,000 கிலோ பால்!
இந்தியாவில் பாலுக்கான சிறந்த பசு இனம்னா.. அது இந்த சாஹிவால் ரக மாடுங்கதான்.  ஒரு ஈத்தில் (305 நாட்கள்) 3,000 கிலோ முதல் 6,000 கிலோ வரைக்கும் பால் கொடுக்கற அற்புதமான இனம். இதோட பாலில் 4 முதல் 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருக்கிறது. பெரிய மடி, நல்ல சிவப்பு நிறம், கனமான குட்டைக் கொம்பு, சிறிய திமில், கம்பீரமான  உடமைப்பு என்று பார்க்கிறதுக்கே அம்சமா இருக்கும். கடுமையான வெப்பம், கடுமையானப் பனி, மழைனு எதற்கும்  சளைக்காது. வெளிநாட்டு மாடுகள், குளிர்காலத்தில் அதிகமாகவும், வெயில் காலத்தில் குறைந்தளவும் பால் கொடுக்கும். ஆனால், சாஹிவால் உள்ளிட்ட நாட்டு மாடுகள், எப்பவும் ஏற்றத் தாழ்வு இல்லாம ஒரே அளவில் பால் கொடுக்கும்.

பஞ்சாப் மாநிலத்தில்தான் இந்த மாடுகளை அதிகமாக வளர்க்கிறார்கள். நம்ம ஊரில் செம்மறி ஆடுகளை மந்தையாக மேய்க்கிறது மாதிரியே, இந்த மாடுகளை மந்தை, மந்தையா மேய்க்கிறாங்க.  அதனால் இ்ந்த மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடறதே இல்லை. ரொம்ப தூரம் வரைக்கும் மேய்ச்சலுக்கெல்லாம் போயிட்டு வருது. கை வளர்ப்பா வளர்த்தா சொன்னதெல்லாம் கேட்கிற அற்புதமான மாடு சாஹிவால், நம்ம ஊரில் மாடுகளை முன்னவிட்டு, பின்னாடி போறோம். வட நாட்டில் மேய்க்கறவரு முன்னாடி போக, அவருக்கு பின்னாடியே போகிறது மாடுகள். அதுக்கு காரணம் மாடுகளை வளர்க்கிற முறைகள் தான்.

அன்புக்கு அடிமை!
சாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடித்து அடக்கணும்னு நாம் நினைத்தால் கண்டிப்பா அடங்காது. முரண்டு பிடிச்சுக்கிட்டே இருக்கும். அதே நேரத்தில் தடவிக் கொடுத்து அன்பா வளர்த்தா, நாய்க் குட்டி மாதிரி காலை சுத்திக்கிட்டே இருக்கும். பொதுவா எந்த மாடாக  இருந்தாலும், ஒரே இடத்தில் கட்டிப் போட்டு வளர்க்க கூடாது. தினமும் 3 மணி நேரமாவது சூரிய ஒளி மாடுகளின் உடலில் படுகிற மாதிரி நடக்க விடணும்.
சாஹிவால் மாடுகள் 18-ம் மாசத்தில் பருவத்திற்கு வந்துவிடும். நான் வாங்கிட்டு வந்த மாடுகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கிறேன். ஒரு பசுவுக்கு சராசரி 13 லிட்டர் பால் கிடைக்கிறது. இந்த ரக மாடுகள் கூட்டமாக இருக்கிறததான் விரும்பும். அதனால் குறைந்தது 5 மாடுகளையாவது ஒன்றாக சேர்த்துதான் வளர்க்கணும். நம்ம ஊரில் இந்த மாடுகளை இப்பதான் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுகளோட எண்ணிக்கை அதிகரிக்கிறப் பொழுது இங்கேயே விலை குறைவாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்று விரிவாகப் பேசி முடித்தார் திம்மையா..
பாலுக்கான  நாட்டு ரக மாடுகள்
ரகங்கள்
கிடைக்கும் இடங்கள்
கிர்
குஜராத். ராஜஸ்தான்
சாஹிவால்
பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம்
ரெட் சிந்தி
ஆந்திரா
வறட்சியைத் தாங்கும் இனங்கள்
மால்வி
ராஜஸ்தான், மத்திய பிரதேசம்
நாகேரி
டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம்
ஹாலிக்கார்
கர்நாடகா
காங்கேயம்
தமிழ்நாடு
பொதுவான ரகங்கள்
ஹரியானா
ஹரியானா, பீகார், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா
ஓங்கோல்
ஆந்திரா
காங்கிரேஜ்
குஜராத்
தார்பார்க்கர்
குஜராத், ஆந்திரா
தொடர்புக்கு :
திம்மையா, அலைபேசி : 94861 -11653     

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...