தமிழகத்தின் மிக முக்கியமான பணப்பயிர்களில் வாழையும் ஒன்று. புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும்கூட, பெரும்பாலும் நல்ல வருமானம் தரக்கூடியது. இந்தியாவில் சுமார் 6,45,000 ஹெக்டேரில் வாழை பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1,15,000 ஹெக்டேரில் பல்வேறு ரகங்களில் வாழை பயிரிடப்படுகிறது.
தற்போது வாழை நார் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எட்டு மணி நேரத்தில் 30 கிலோ வாழை நார்களை எளிதில் பிரித்தெடுக்க முடியும்.
வாழைநாரில் இருந்து அலங்காரத் தொப்பிகள், கூடைகள், பை, பாய்கள், திரைச்சீலைகள் போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வாழை நார்கள் மூலம் தயாரிக்கப்படும் சிறப்புக் காகிதங்கள் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
மேலும் வாழை நார்கள் தண்ணீரின் மேல் மிதக்கும் எண்ணெயை அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால் வாழை நார்களைப் பயன்டுத்தி கடலில் கலக்கும் எண்ணெயை எளிதில் பிரிக்க முடியும் என்று ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் வாழை நார்களுக்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனம் வாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை அறிமுகம் செய்தது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வாழை நாரால் தயாரிக்கப்படும் புடவைகள் எடை குறைவாகவும், மிருதுவாகவும், அதிக ஈரத்தன்மை உறிஞ்சும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன. இதனால் வாழைநார் புடவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தினந்தோறும் ஒரு ஷிப்ட் வீதம் மாதத் திற்கு 26 நாட்கள் வேலை செய்தாலே மாதம் ரூ.22,780 வருவாய் கிடைக்கும். வாழை நாரிலிருந்து உபபொருட்களாகக் கிடைக்கும் வாழைச் சாற்றிலிருந்து திரவ உரம் தயாரிக்க முடியுமா என்று தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாழைச்சாறு தவிர மற்ற கழிவுகளை நன்கு மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கலாம். அதன்மூலமும் வருமானம் கிடைக்கும். வாழை அதிகம் விளையும் ஒவ்வொரு கிராமத்திலும் தனி நபராகவோ அல்லது சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ இத்தகைய மதிப்புக்கூட்டும் தொழிலை எளிதில் செய்ய முடியும்.
வாழை நார் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் மற்றும் இதர தொழில் நுட்பங்கள் தேவைக்கு :
வாழைநார் ஆராய்ச்சி மையம்,
22, நல்லப்பன் தெரு, குரோம்பேட்டை,
சென்னை – 600 044
என்ற முகவரியில் பெறலாம்.
தொலைபேசி : 044-2223 1796. செல்பேசி :94440 15576.
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்