தமிழக அரசுத்துறையில், குரூப்-1 பிரிவில் 2008-09ம் ஆண்டுக்கான 66 காலி இடங்களுக்கான முதல்நிலை போட்டித்தேர்வு கடந்த மே 2ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஜனவரி 22, 23ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடக்கிறது. இந்நிலையில், 2009-10ம் ஆண்டுக்கான குரூப்-1 பிரிவில் காலியாக உள்ள 131 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
அதன்படி 56 துணை கலெக்டர், 29 டிஎஸ்பி, 28 வணிகவரித்துறை உதவி கமிஷனர், 7 மாவட்ட பதிவாளர், 10 ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் என மொத்தம் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முதல்நிலை போட்டித் தேர்வு வரும் மே மாதம் 22ம் தேதி நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் இன்றுமுதல் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.30. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 28ம் தேதி கடைசி நாள். 10+2+3 என்ற முறையில் டிகிரி முடித்தவர்கள் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியாக உள்ள 56 துணை கலெக்டர் பணியிடங்களில் 23 பணியிடங்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பின்னடைவு காலிப்பணியிடமாக ஒதுக்கப்பட்டு உள்ளது. வணிகவரித்துறை உதவி கமிஷனர் பதவிக்கு வணிகவியல் மற்றும் சட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, கூறுகையில்,’கடந்த மே மாதம் நடந்த குரூப்-1 தேர்வுக்கு ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு இருந்தது. இந்தமுறை கூடுதலாக 1 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தேவையான அளவுக்கு விண்ணப்பங்கள் அச்சிட்டு, தபால்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது’ என்றார்.
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்