நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Sunday, December 12, 2010

வேலைவாய்ப்புகளைக் குவிக்கப் போகும் அரபு நாடுகள்

1932 ஆம் ஆண்டில் முதன் முதலில் அரபு மண்ணில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட போது உலகின் ஒட்டுமொத்தக் கவனமும் மத்திய கிழக்கு நாடுகளின் பக்கம் திரும்பியது. உலகமே ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு உட்படுத்திக் கொள்ளத் தயாரானது. குறிப்பாக இஸ்லாம் பிறந்த, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து மறைந்த மண்ணில் பீறிட்டு எழுந்த கருப்புத் தங்கம் என்கிற கச்சா எண்ணெய்ச் செல்வம் 1950-க்குப் பிறகு உலகத்தின் சமூக, அரசியல் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.



சவூதி அரேபியாவில் முதன்முதலாக தமாம் நகரில் 1939-ல் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற காலத்தில் உலகில் இனி பொருளாதார ரீதியாக மாபெரும் புரட்சி ஏற்படப் போகிறது என்பதைச் சொன்ன போது அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்க வல்லரசு மத்திய கிழக்கில் ஏற்படப் போகும் இந்தப் பொருளாதாரப் பிரளயத்தை, அரபு மண்ணிலிருந்து பீறிட்டு எழப்போகும் இந்த கருப்புத் தங்கத்தை முன்கூட்டியே புரிந்து கொண்டு, முந்திக் கொண்டு சவூதி ஆட்சியாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டது.

பூமியிலிருந்து எண்ணெய் வெளியே எடுக்கப்பட்ட செய்தி வெளி உலகிற்குச் சென்றவுடன் உலகின் பெரு முதலாளிகள் அனைவரின் பார்வையும் அரபு நாடுகள் மீது விழுந்தது.

1950-க்குப் பிறகு அடுத்து வந்த 25 ஆண்டுகளில் உலகில் உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வுப் பொருட்களில் ஏறக்குறைய முக்கால்வாசிப் பொருட்கள் அரபு நாடுகளை மையப்படுத்தியே உற்பத்தி செய்யப்பட்டன. உலகிலேயே வாங்கும் திறன் படைத்த மக்கள் அதிகம் வாழும் பகுதியாக அரபு நாடுகள் மாறிப்போயின. எண்ணெய் விற்பனை மூலம் பெறப்பட்ட அபரிமிதமான வருவாய் வளைகுடா நாடுகள் என்று சொல்லப்படும் 6 அரபு நாடுகளில் வாழும் மக்களின் மனோபாவத்தையும் வாழ்க்கைச் சூழலையும் அடியோடு மாற்றியது.

இன்று உலக கச்சா எண்ணெய் வளத்தில் 56% மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சவூதி அரேபியா உலகின் முதன்மை நாடாகத் திகழ்கிறது.


1960களில் எண்ணெய் விற்பனை இலாபம் அதிகப்படியாக வரத் தொடங்கியபோது அரபு பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளும் வர்த்தக நிறுவனங்களும் பெருகத் தொடங்கின. அதில் பணியாற்றுவதற்கு அதிகப்படியான தொழிலாளர்கள், மனிதவளம் தேவைப்பட்டது. தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தில் அரபு நாடுகள் பற்றிய செய்திகள் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. மலையாளிகள் முந்திக் கொண்டனர். அரபு நாடுகளோடு அவர்களுக்கு இருந்த வரலாற்று ரீதியான தொடர்பும் அவர்களின் அரபு மொழிப் புலமையும் வெகு விரைவாக மலையாளிகள் அரபு நாடுகளுக்கு புலம் பெயர்ந்திட வாய்ப்பை பெருமளவு ஏற்படுத்தித் தந்தது.


தமிழகத்தில் கல்வி கற்று அரசு வேலை வாய்ப்பு பெற ஆர்வம் இன்மையாலும் மேலும் அரசுப் பள்ளிகளில் முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமையாலும் ஏற்பட்ட சிக்கலால் 1965க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரபு நாடுகளுக்கு பொருளீட்டச் செல்லும் வழக்கம் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் அரபு நாடுகளில் செல்வம் பெருகப் பெருக பாலைவனங்களிலும் மணற்கோட்டைகளிலும் வாழ்ந்த அரபு மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள்ள கட்டமைப்பு பணிகளில் கவனம் செலுத்தினர். அதனால் கட்டமைப்புப் பணிகளில் பணியாற்றிட தொழிலாளர்கள் அதிகம் தேவைப்பட்டனர். உடல் உழைப்பைச் செய்யும் திறன் வாய்ந்த இளைஞர்கள் பெருமளவில் அரபு மண்ணை நோக்கிச் செல்ல தொடங்கினர். பல ஆயிரம் ரூபாய் விசாவிற்கு பணம் கொடுத்துச் சென்றனர். அதில் சிலர் ஏமாந்து அனைத்தையும் இழந்து ஊர் திரும்பினர். ஆனாலும் அரபு நாடுகளுக்கான போக்குவரத்து நாடுக்கு நாள் பெருக தொடங்கியது.


அரபு மண்ணில் கச்சா எண்ணெய் உற்பத்தி மேலும் பெருகப் பெருக, செல்வம் வந்து சேரச் சேர அரபு மக்களிடையே வசதிவாய்ப்புகள் மற்றும் வெளிநாடுகளின் தொடர்புகள் அதிகரித்தன. வெளிஉலகத்திற்கான விமானப் போக்குவரத்து அதிகரித்தன. அரபு மக்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் பயணம் மேற்கொண்டனர். அதன் காரணமாக மேலை நாட்டு மக்களின் மேற்கத்திய வாழ்வியல் வழிமுறைகளின் தாக்கம் ஏற்பட்டது. 1980க்குப் பிறகு உலக நாடுகளோடு போட்டி போட்டு அரபு நாடுகள் பொருளாதார ரீதியாக வளரத்தொடங்கிய போது நவீன அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினர். அந்த நேரத்தில் நிதி மற்றும் மேலாண்மை தொடர்பாக படித்த பட்டதாரிகளும் பல துறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களும் அரபு நாடுகளுக்குத் தேவைப்பட்டனர். இந்தச் செய்திகள் உலகம் முழுவதும் பரவியது. அந்த நேரத்தில் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அரபு நாட்டு மோகம் உச்சத்தைத் தொட்டது.

தொடக்க காலத்தில் படிக்காமலேயே – பட்டம் பெறாமலேயே உடல் உழைப்பைக் கொடுத்து தமிழகத்திலிருந்துச் சென்றவர்கள் பெற்ற ஊதியம் இந்தியாவில் அந்த நேரத்தில் முதுநிலை பட்டதாரிகள் பெற்ற ஊதியத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். ஆனால் 1980-க்குப் பிறகு அரபு நாடுகளின் தேவை மாறி வருவதையும் மக்களின் மனநிலை மாறி வருவதையும் அரபு நாடுகளின் எதிர்கால திட்டங்கள் மற்றும் முதலீடுகள் எப்படி அமையப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் அதற்கேற்ப தங்களை தயார் செய்யாமல் தமிழக முஸ்லிம் சமூகம் வழக்கம் போல் அலட்சியம் செய்தது.


படித்து பட்டம் பெற்று நிர்வாகத் திறன் படைத்தவர்களாகவும் தொழில் நுட்ப வல்லுனர்களாகவும் தரம் உயர்த்திக் கொண்டு செல்ல வேண்டிய தமிழக முஸ்லிம் சமூகம் படிக்காமலேயே கிடைக்கும் பொருளாதாரத்தில் இருந்த மோகத்தின் காரணமாக மாபெரும் தவறிழைத்தது. மனித ஆற்றலை மேம்படுத்தி தொழில்நுட்ப வல்லுனர்களாக மாற்றும் தன்மையுடைய கல்வியை பாதியில் விட்டுவிட்டு எவ்வளவு சீக்கிரம் பாஸ்போர்ட் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொண்டு குடியிருந்த வீட்டை, நகையை, நிலத்தை என அனைத்தையும் அடகு வைத்து அல்லது விற்றுவிட்டு ஏஜென்டுகளிடம் கொடுத்து அரபு நாடுகளை நோக்கி தாறுமாறாக ஓடியது.

அதேநேரத்தில் இந்தியாவில் படித்து பட்டம் பெற்ற சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாறி வந்த அரபு உலகத்தின் தேவையைச் சரியாக கணித்து, சிந்தித்து அதற்கேற்ப தங்களின் திறன்களை வளர்த்துக் கொண்டு அரபு நாடுகளின் அரசு நிர்வாகத்திற்கும் பெருகி வந்த தொழிற்சாலைகளுக்கும் நிதியை ஆளுமை செய்யக்கூடிய உயர் பொறுப்புகளுக்கும் பணி நியமனம் பெற்று குடும்பத்தோடு சகல விதமான சலுகைகளோடு சென்றனர்.


அதே வேளை கல்வியின் தன்மை உணராத முஸ்லிம் சமூக இளைஞர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லேபர் வேலை செய்திட பைத்தியம் பிடித்து ஓடினார்கள். திருமணம் ஆன ஒரு மாதம், இரண்டு மாதம் என்று வாழ்க்கையின் அபூர்வமான விழுமங்களை காசிற்காக காற்றில் பறக்கவிட்டு ஓடினார்கள். இரண்டு வருடங்கள் மூன்று வருடங்கள் என்று கட்டிய இளம் வயது மனைவியையும் பிள்ளைகளையும் தவிக்க விட்டு தன்நிலை உணராது ஓடினார்கள். இஸ்லாமிய மார்க்கம் தடை செய்த போதும் ஓடினார்கள். இதனால் சில ஊர்களில் சில நல்ல குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமானது. முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பல அறிஞர் பெருமக்கள் பெருகி வந்த இந்த விபரீதத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

 தொண்டை கிழிய தெருத்தெருவாக கத்தினார்கள். ஆனாலும் தடுத்திட முடியவில்லை. கடந்த 35 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த இந்த மோகம், இந்த போதை தலைக்கு ஏறி தற்சமயம் அரபு நாட்டை விட்டால் சம்பாதிக்க வேறு வழியில்லை என்ற அளவிற்கு மனநிலை உருவாகி அதற்கே முழுதாக அடிமைப்பட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிட்டது.


பல வருடங்கள் பிரிந்து வாழ்ந்ததின் விளைவாக கணவன் மனைவி இடையே கருத்து முரண்பாடுகளும் கட்டுப்படாத பிள்ளைகளுமாய் பல குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களை அனுபவித்து வருகின்றன. குறிப்பாக கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் இதனால் எல்லையில்லாத மனவேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர். கூடுதல் சம்பாத்தியம் என்ற ஒரே காரணத்திற்காக வாழ்க்கை என்கிற உன்னதமான உயிர்ப்புள்ள ஜீவனை தொலைத்துவிட்டனர். பிழைப்பிற்காக வாழ்க்கையைத் தொலைத்தனர்.

தாங்களாக மாற்றிக் கொண்ட சொகுசு வாழ்க்கை முறைக்கு ஏற்ப வசதி வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளத் தேவைப்படும் பொருளாதாரம் குடும்பத்தை விட்டுவிட்டு அரபு நாடுகள் சென்றால் தான் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கை தொலைந்தாலும் பரவாயில்லை என்ற அளவிற்கு மார்க்கத்தின் பாதுகாப்பு வட்டத்தை விட்டும் இந்த மக்களை வெளியேற வைத்தது நுகர்வு கலாச்சாரம்.


இறைவனும் இறைதூதரும் வகுத்துத்தந்த அற்புதமான வாழ்வியல் கோட்பாட்டை உடைத்தெறிந்தனர்.

புரையோடிப் போய் உள்ள இந்த வாழ்வியல் சீர்கேட்டிற்குத் தீர்வு கண்டாக வேண்டும். ஒரு தலைமுறை அறியாமையால் செய்த தவறை அடுத்த தலைமுறையும் செய்ய அனுமதிக்கக்கூடாது.

தலைமுறை தலைமுறையாக சமூகத்தில் தவறுகள் நடக்கிறது என்றால் தலைமைத்துவம் சரியில்லை என்பது நிருபணம் ஆகும்.

என்னதான் மாற்று?

வளைகுடா நாடுகளின் வளம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து 2020களில் அரபு மண்ணில் ஏற்படப் போகும் பொருளாதார பூகம்பம் பற்றி உலக வர்த்தக அமைப்பும் (கீஜிளி) உலக வங்கியின் ஆய்வறிக்கையும் பல பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகளும் இனி அடுத்து வரும் 20-30 ஆண்டுகளில் வளைகுடா நாடுகள் உலகில் அசைக்க முடியாத பொருளாதார சக்திகளாகப் பரிணமிக்க இருக்கின்றன என்கிற தகவலை வயிற்றெரிச்சலுடன் வெளியிட்டுள்ளன.


மத்திய கிழக்கில் அரசியல் ரீதியாகப் பல நெருக்கடிகள் சூழ்ந்து இருந்தாலும்கூட அதையெல்லாம் தாண்டி வளம் நிறைந்த பகுதிகளாகவும் புதிய வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் நிலப்பகுதிகளாகவும் உருவெடுக்க இருக்கின்றன.

21ஆம் நூற்றாண்டிற்கான அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் ஏற்படப் போகும் ஒரு மாற்றத்திற்காக அரபு நாடுகள் தயாராகி வருகின்றன. இனி அரபு நாடுகள் காணப்போகும் மிகப்பெரும் பொருளாதார மாற்றத்தின் பலன்கள் முஸ்லிம் சமூகம் முழுமையாகப் பெற இதோ எளிமையான வழிகள்.
இப்போது அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக செல்ல வேண்டும்! ஆனால், முன்பு சென்றது போல் அல்லாமல் கட்டிய மனைவியையும்குழந்தைகளையும் கையோடு கூட்டிச் செல்ல வேண்டும். சென்ற தலைமுறை இழந்த உன்னதமான வாழ்வை இந்தத் தலைமுறையாவது பெற்றிட இன்றே தயாரிப்புகளைத் துவங்கி இனியாவது குடும்பத்தோடு அரபு நாடுகளில் குடியேறுவோம்.

அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்வோம். அறிவும் ஆற்றலுமிக்க தொழில்நுட்ப வல்லுனர்களாக, மிகச்சிறந்த நிர்வாகத் திறன் பெற்றவர்களாக மாறி வரும் அரபுலகின் தேவையறிந்து அதற்கேற்ற வல்லுனர்களாக நமது அடுத்த தலைமுறையை மாற்றிடுவோம்.

தற்போதைய உலகளாவிய பொருளாதார மந்த நிலையில் கூட துபாய் தவிர்த்த பிற அரபு நாடுகள் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை. துபாயில் கூட கட்டுமானத் துறையும் அதோடு தொடர்புடைய துறைகளும்தான் வீழ்ச்சியைச் சந்தித்தன.

கட்டுமானத் துறை சார்ந்த வேலைகள் அதிகம் நடைபெற்றதால் பெரிய பாதிப்பு போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இது மாறி வருகிறது.


CMN சலீம்

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...